இலங்கை தமிழரின் வாழ்க்கைத் துயரைச் சொல்லும் சிவப்பு



இலங்கை தமிழரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் படம் சிவப்பு. தமிழ் சினிமாவில் இந்தப் படம் குறித்துதான் இப்போது அதிகமாகப் பேசிக் கொள்கிறார்கள். முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட் - புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் (பி) லிட் ஆகிய பட நிறுவனங்கள் இணைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இப்படத்தை ‘கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ளார். இதில் நாயகனாக நவீன் சந்திராவும் நாயகியாக ரூபா மஞ்சரியும் நடித்திருக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு, பூ ராம், சோனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கோனார் என்ற அழுத்தமான பாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

இலங்கை தமிழர் வாழ்க்கை படம் பற்றி பேசிய இயக்குநர் சத்யசிவா, "இது இலங்கை தமிழர் பற்றிய படம். இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக ஏங்குகிறவர்களின் வாழ்க்கைப் பதிவுதான் இந்த ‘சிவப்பு' திரைப்படம்.

கதை

இங்கேயேதான் படப்பிடிப்பை நடத்தினோம். இங்கிருந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தப்பிப் போக நினைத்து, முடியாதவர்களின் மன வலி, காதலையும் உள்ளடக்கிய கதை. அகதி மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய சமூகம் அவர்களை பந்தாட நினைக்க, பாதுகாப்பு அரணாக ராஜ்கிரண் கோனார் என்கிற கம்பீர வேடமேற்றிருக்கிறார்.

இதில் அழகிய காதலும் இருக்கிறது. அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கிறது. படம் பார்க்கிற ஒவ்வொரு மனிதனின் மனதை ஒரு நிமிடம் உலுக்கி விடும் இந்த ‘சிவப்பு'. இலங்கை தமிழர்களைப் பற்றிய படமென்றாலும் ஒரு காட்சிகூட இலங்கையில் எந்தவிதமான படப்பிடிப்பும் நடத்தவில்லை.


மே மாதம் வெளியிடுகிறார்

ராஜ்கிரணின் நடிப்பில் மயங்கி இந்தப் படத்தை வாங்கியுள்ளார் பிரபல விநியோகஸ்தரான தேசிகன். தன்னுடைய எஸ்.எஸ்.மீடியா நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது...," என்றார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Cinema News