லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை




லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச வழக்குகளுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்க, ஏற்கனவே சட்டத்தில் இடமுள்ள நிலையில், 'லஞ்சம், மிகக் கொடிய குற்றம்' என, திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தங்களுக்கு சாதகமாக அரசு அலுவலகங்களில் வேலை நடைபெற அல்லது தங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பதற்காக, அரசு அதிகாரிகளுக்கு, தனிநபர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர். இதனால், நேர்மையான நிர்வாகம் நடைபெறாத நிலை ஏற்படுகிறது.இதைத் தடுக்க, 1988ல், லஞ்ச தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி, லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம், ஆறு மாதங்கள் முதல், அதிகபட்சம், ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.

ஐ. நா., சபை பரிந்துரை :

இது போன்ற தண்டனைகள் தான், பெரும்பாலான உலக நாடுகளில் வழங்கப்பட்டன. இந்த தண்டனை மிகவும் குறைவாக இருக்கிறது என, கருதிய, ஐக்கிய நாடுகள் சபை, லஞ்சம், ஊழலுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்க, புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என, உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்தது.அதன் படி, 2013ல், புதிதாக லஞ்ச ஒழிப்பு சட்டம் கொண்டு வர, அப்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக மசோதா தயாரிக்கப்பட்டது. 

லோக்சபாவில் நிறைவேறிய அந்த மசோதா, ராஜ்ய சபாவில், இரண்டு ஆண்டுகளாக முடங்கியுள்ளது.இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், லஞ்சத்திற்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 1988ல் கொண்டு வரப்பட்ட, லஞ்ச ஒழிப்பு சட்டத்தை திருத்தி, 'மிகக் கொடிய குற்றம்' என, லஞ்சத்திற்கு புதிய விளக்கம் அளித்து, தண்டனை காலத்தையும்  
அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதன் படி, குறைந்தபட்ச தண்டனையாக உள்ள, ஆறு மாதங்கள் சிறை தண்டனை, மூன்று ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை, ஐந்தாண்டுகளில் இருந்து, ஏழு ஆண்டுகளாக உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.இதில் கூடுதல் அம்சமாக, லஞ்சம் பெறுபவர் மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பவருக்கும், அதே அளவிலான தண்டனை வழங்குவது என, அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; பெறுவதும் குற்றம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, பார்லிமென்டில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, விரைவில் நிறைவேறும். அதன் பிறகு, லஞ்சம் கொடுப்பவர்களும், பெறுபவர்களும், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவர்.

லஞ்சத்தை ஒழிப்பதற்கான மத்திய அமைச்சரவை முடிவில், மேலும் சில முக்கிய அம்சங்களாவன:
*லஞ்ச வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க, காலக்கெடுநிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி, லஞ்ச வழக்கு விசாரணை, அதிகபட்சம், இரண்டாண்டுகளுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

*பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் மற்றும் பதவியை ராஜினாமா செய்பவர்களை, லஞ்ச வழக்கிலிருந்து காக்கும் வகையில், அவர்களின் மேலதிகாரிகளின் முன் அனுமதி அவசியம் என்ற நிபந்தனையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதன் படி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீதான சட்ட நடவடிக்கைக்கு, 'லோக்பால்' அல்லது 'லோக் ஆயுக்தா' அமைப்புகளிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். 

*அரசு அதிகாரிகளுக்கு, தனியார் நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதை தடுக்கும் வகையில், சில விதிமுறைகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது.

*லஞ்ச அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரம், இப்போதைய சட்டங்களின் படி, விசாரணை நீதிமன்றங்களுக்கு கிடையாது; மாவட்ட நீதிமன்றங்களுக்குத் தான் உண்டு. அது மாற்றியமைக்கப்பட்டு, வழக்கை விசாரிக்கும் நீதிமன்றமே, சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


*நன்றாக தெரிந்தே, லஞ்சம் மூலம் சொத்துகளை குவித்து வளமாக்கிக் கொள்வது, குற்ற நடவடிக்கையாகக் கருதப்படும். அத்தகைய வருமானத்திற்கு அதிகமான சொத்து, முறைகேடான சொத்துகளாகக் கருதப்படும்.

*பணம் கொடுப்பது மட்டும் தான் லஞ்சம் என இருந்தது, இனிமேல், பணமில்லாத பிற அம்சங்கள் பெறுவதும், கொடுப்பதும் லஞ்சமாகவே கருதப்படும்.இவ்வாறு, பல முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, லஞ்சம், ஊழலை நாட்டிலிருந்து விரட்ட உறுதியாக உள்ளது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Cinema News